52.தோற்பதில் ஒரு சுகம்! (அன்பின் விளையாட்டு)
52.தோற்பதில் ஒரு சுகம்! (அன்பின் விளையாட்டு)
நானும் வைபவும் எங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தோம். அப்போது எங்கிருந்தோ இரண்டு சிறிய கற்களை எடுத்துக் கொண்டு ஓடி வந்தான் வைபவ்.
"அப்பா, உங்களுக்கு ஒண்ணு, எனக்கு ஒண்ணு" என்று என் கையில் ஒரு கல்லைத் திணித்தவன், "இப்போ யாரு இந்தக் கல்லை ரொம்ப தூரமா வீசுறாங்கன்னு பாக்கலாமா? மொதல்ல நீங்க வீசுங்க அப்பா!" என்று ஆர்வமாகக் கூறினான்.
என் மகனின் அந்தச் சின்ன விளையாட்டில் அவன் சந்தோஷப்படுவதைப் பார்க்க நினைத்தேன். நான் தோற்று, அவனை ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், என் கையில் இருந்த கல்லை அதிக தூரம் வீசாமல் என் அருகிலேயே விழும்படி மெதுவாக வீசினேன்.
இப்போது வைபவ்வின் முறை. அவன் கல்லை எப்படி தூக்கி எறியப் போகிறான் என்று நான் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவன் செய்ததோ வேறு! என்னை மாதிரியே அவனும் அந்தச் சிறிய கல்லை அதிக தூரம் வீசாமல் அவனுக்குப் பக்கத்திலேயே போட்டான்.
கல் கீழே விழுந்ததும், "அப்பா... நீங்கதான் ஜெயிச்சிட்டீங்க!" என்று துள்ளிக் குதித்துக் கொண்டாடினான் என் வைபவ்.
நான் அவனுக்காகத் தோற்க நினைத்தேன்... ஆனால் அவனோ, எனக்காகத் தோற்று, என் வெற்றியைத் தன் வெற்றியாகக் கொண்டாடுகிறான்! பிள்ளைகளின் கள்ளமில்லா அன்புக்கு முன்னால் நாம் எப்போதுமே தோற்றுப்போகிறோம் என்பதை அந்த நொடியில் முழுமையாக உணர்ந்தேன். இது வெறும் வெற்றியல்ல, என் பிரபஞ்சத்தின் அன்பு!
*****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை
புன்னகை மன்னன்
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026
கருத்துகள்
கருத்துரையிடுக