34.நனைவதற்கல்ல மழை... வாழ்வதற்கும் கூட! 🌧️🔥
34.நனைவதற்கல்ல மழை... வாழ்வதற்கும் கூட! 🌧️🔥
நேற்று மாலை (14.05.2026) பட்டுக்கோட்டை நோக்கி எனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். வானம் மேகமூட்டத்துடன் லேசானத் தூறலைப் பொழிந்து கொண்டிருந்தது. சட்டென்று மழை வலுத்துவிடுமோ என்ற பயத்தில், "நனைந்துவிடக் கூடாது, என்ற பதற்றத்தில் வண்டியின் வேகத்தை அதிகரித்தேன்.
சாலையில் மற்றவர்களை முந்திக் கொண்டு என் இலக்கை நோக்கியே என் கண்கள் இருந்தன. ஆனால், வழியோரம் நான் கண்ட ஒரு காட்சி, என் மனச்சாட்சியை உலுக்கியது; வண்டியின் வேகம் தானாகவே குறைந்தது.
சாலையோரத்தில் தற்காலிகக் கூடாரம் அமைத்துத் தங்கியிருக்கும் அந்த நாடோடி மக்கள், பெய்து கொண்டிருந்த மழையில் நனைந்து கொண்டே சமையல் செய்து கொண்டிருந்தார்கள்.
நான் நனையாமல் இருக்க ஓடினேன்; அவர்களோ நனைந்து கொண்டே அடுப்பு அணையாமல் இருக்கப் போராடிக் கொண்டிருந்தார்கள்.
* எனக்கு நனைந்தால் சளி பிடிக்கும் என்ற கவலை; அவர்களுக்கு அடுப்பு நனைந்தால் அன்று இரவு பட்டினி என்ற எதார்த்தம்.
மழைத்துளிகள் அவர்கள் பாத்திரத்தில் விழுந்து கொண்டிருக்க, அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் காட்டிய அந்த நிதானம் எனக்கு ஒரு பாடத்தைப் புகட்டியது. "நாமெல்லாம் ஒரு சிறு தூறலுக்கே இவ்வளவு பதற்றப்படுகிறோமே, இவர்களோ வாழ்வின் பெருமழையையே அன்றாடம் எதிர்கொள்கிறார்களே!" என்று தோன்றியது.
அவர்கள் சமையல் செய்யும் அந்த நிலையைப் பார்த்த பிறகு, நனைவதைப் பற்றிய கவலை எனக்கு அற்றுப் போனது. வண்டியின் வேகத்தை முற்றிலுமாகத் குறைத்து, அந்த மழையை அனுபவித்தபடி பயணத்தைத் தொடர்ந்தேன்.
****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:
புன்னகை மன்னன்
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026
கருத்துகள்
கருத்துரையிடுக