23.விரலில் மை... மனதில் ஒருவித வலி! Ink on Finger, Ache in Heart"
23.விரலில் மை...
மனதில் ஒருவித வலி!
Ink on Finger, Ache in Heart"
அன்று -
பாடப்புத்தக சுமையோடு
பதறி ஓடித்திரிந்த அதே பள்ளிக்கூடம்...
இன்று -
தேசத்தின் தலைவிதி எழுதும்
தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டு வளாகம்!
ஒரு விரல் மையால் நாட்டின்
திசையைத் தீர்மானிக்க வரிசையில் நிற்கிறேன்...
மனமோ -
காலம் தின்ற என் பால்யத்தைத் தேடி பின்னோக்கி ஓடுகிறது!
எங்களுக்கு அரணாக நின்ற
அந்தப் பெரிய மாமரமும்...
நிழல் போர்த்திய பாதம் மரமும்...
அவற்றின் இடுக்கில்
எங்களோடு பயின்ற
அந்தச்
சிறு கட்டெறும்புகளும் எங்கே?
மரங்கள் இழந்த நிலத்தில்
இன்று
வகுப்பறைகள் மட்டும் பெருகிக் கிடக்கின்றன...
வெற்றுச் சுவர்கள் பெருகியது போல் - ஒவ்வொரு ஆண்டும் மாணாக்கர்களும்
பெருக வேண்டும் என்ற
ஏக்கத்தோடு
என் வாக்கைச் செலுத்தினேன்!
என் காலத்து நினைவுகளோடும்,
வருங்காலத்து எதிர்பார்ப்போடும்!
*****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:
புன்னகை மன்னன்
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026
கருத்துகள்
கருத்துரையிடுக